Tamilnadu
இளம்பெண் படுகாயம் : லாரி டிரைவர் மீது மட்டும் வழக்கு... அதிமுக பிரமுகரை காப்பாற்ற நினைக்கிறதா காவல்துறை?
அ.தி.மு.க கொடிக்கம்பம் விழுந்து கோவை இளம்பெண் படுகாயமடைந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரியும் அனுராதா, சின்னியம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.
கோவை அவிநாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அனுராதா, சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததைக் கவனித்து தன் மீது விழாமல் தவிர்ப்பதற்காக வண்டியை நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது, பின்னால் வந்த லாரி அனுராதாவின் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். காலில் படுகாயமடைந்த அனுராதாவிற்கு நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
விபத்திற்குக் காரணமாக இருந்தது அப்பகுதி அ.தி.மு.க பிரமுகர் சுவாமி போமிவதன் இல்லத் திருமணத்திற்காக சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிகம்பங்கள் எனத் தெரியவந்துள்ளது. அ.தி.மு.க கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்டதை காவல்துறையினர் மறைக்க முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் லாரி மோதியதில் விஜய் ஆனந்த் என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளார். அனுராதாவை மோதிய லாரி விஜய் ஆனந்த்தின் இருசக்கர வாகனத்தின் மீது ஏறியதில் கடுமையான சேதமடைந்துள்ளது.
இதையடுத்து, அவர் போலிஸாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் முருகன் மீது கிழக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிக் கம்பம் சாய்ந்ததே விபத்துக்கு காரணம் என அனுராதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், லாரி ஓட்டுநர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், படுகாயமடைந்த இளம்பெண் அனுராதாவை மருத்துவமனையில் அனுமதித்த வடிவேல் என்பவரை, போலிஸார் விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் வைத்திருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், சென்னை பள்ளிக்கரணையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அ.தி.மு.க பேனர் விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் சுபஸ்ரீ எனும் இளம்பெண் பலியானார். அந்த பேனரை வைத்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் மீது எதிர்க்கட்சிகளின் கடுமையான அழுத்தத்திற்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?