Tamilnadu

தேர்தலில் சீர்திருத்தம் கொண்டு வந்த ‘சீர்திருத்த நாயகன் டி.என்சேஷன்’ மறைவு : தலைவர்கள் அஞ்சலி!

தமிழகத்தை சேர்ந்த டி.என். சேஷன் ஐ.ஏ.எஸ் முடித்து மத்திய அரசில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல் 1996-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதிவரை பொறுப்பு வகித்தார்.

ஆணையராக இருந்த காலகட்டத்தில் தேர்தல் குளறுபடிகளை கட்டுப்படுத்துவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆணையத்தின் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதற்காக அவரை பலர் விமர்சித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் தன் தேர்தல் சீர்திருத்தப்பணியில் தீவிரமாக இருந்தவர்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.என். சேஷன் தனது 87-வது வயதியில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் டி.என். சேஷனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.