Tamilnadu

“விவசாய நிலத்தில்தான் சடலத்தை எடுத்துச் செல்கிறோம்”: மயான பாதையின்றி 100 ஆண்டாக தவிக்கும் கிராம மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் அருகே உள்ளது ஆலம்பூண்டி கிராமம். இங்கு 400-க்கும் மேற்பட்டமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயம் செய்கின்றனர்.

ஆலம்பூண்டி கிராம மக்களுக்கு என சுமார் 75 செண்டு பரப்பளவில் மயானம் ஓன்று உள்ளன. ஆனால் மயானத்திற்கு செல்லும் பாதை இல்லாமல் கடந்த 3 தலைமுறைகளாக அதாவது 100 ஆண்டுக்கு மேலாக தவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சாரதம்மாள். இவர் உடல் நிலை சரியில்லாமல் கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்த பின்னர் சடலத்தை உறவினர்கள் மற்றும் கிராமத்து பொது மக்கள் விவசாய நிலம் வழியாக சிரமத்துடன் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், “எங்கள் கிராமத்திற்கு தனி சுடுகாடு ஒன்று உள்ளது. ஆனால் அங்கு செல்ல பாதைதான் இல்லை. என்னுடைய தாத்தா காலத்தில் இருந்தே இதே நிலைமை தான் நீடிக்கிறது.

கிட்டத்தட்ட அரைகிலோ மீட்டர் தூரம்வரை, விவசாய நிலத்தில் தான் சடலத்தை எடுத்துச் செல்கிறோம். ஏதோ இருகின்ற நிலத்தை வைத்து இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். அவர்களால் இலவசமாக நிலத்தை தரமுடியாது.

இதனால், விவசாயி நிலங்களும், விளைச்சலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. பாவம் அந்த விவசாயிகளினாலும் ஏதும் சொல்லமுடியாமல். அதுமடுமல்லால் சேறு, சகதி, முட்கள் என இருக்கும் விவசாய நிலத்தில் சடலத்தை சுமந்து செல்பவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.

இது சம்மந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக மயான பாதை அமைத்து கொடுக்க ஆலம்பூண்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.