Tamilnadu

சுஜித் மரணம் நமக்கு சொல்லும் பாடங்கள் என்ன? : செய்ய வேண்டிய 13 அம்சங்கள் - பூவுலகின் நண்பர்கள் அறிக்கை!

சுஜித் மரணம் போன்று மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க சில பரிந்துரைகளை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முன்வைத்துள்ளது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தனி மனிதனாக, சமூகமாக, அரசமைப்பாக நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். இதைத்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போன சுஜித் வில்சன் நினைவுப்படுத்துகிறான்.

தொடர்ந்து பேரிடர்கள் மூலமாகவே நாம் பாடங்கள் கற்கிறோம். போபால் விஷவாயு விபத்தின் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வந்தது. சுனாமி பாதிப்பிற்கு பின்பாகதான் பேரிடர் மேலாண்மைச் சட்டம் வந்தது. ஆனால் இன்றளவும் பேரிடர்களை, விபத்துகளை, எதிர் கொள்ளும் வலிமையோடு நம் அரசு இயந்திரம் இல்லை என்னும் உண்மையை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

ஒரு நாடு வல்லரசாக இருப்பதை விட நல்லரசாக இருப்பதே அந்த நாட்டின் குடிமக்களுக்கு நல்லது. நம் அரசமைப்புச் சட்டம் அரசிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. மக்களின் பொது சுகாதரத்தையும், உயிர்வாழும் உரிமையையும் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையான கடமை. அரசின் செயல் திட்டங்களும், கொள்கைகளும் அந்த வகையிலேயே அமைக்கப்பட வேண்டும்.

சுஜித்தின் மரணத்தில் இருந்து நாம் சில படிப்பினைகளை கற்றாக வேண்டும். இனி இப்படியான சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்கான சில பரிந்துறைகளை பூவுலகின் நண்பர்கள் முன்வைக்கிறோம்:

  1. அழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுஜித் வில்சனின் மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்கப்பட வேண்டும்.

  2. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழகத்திற்கு என்று தனி சட்ட விதிகள் இல்லை. சில அரசாணைகள் மட்டுமே உள்ளன. இவை போதுமானது இல்லை. தமிழ்நாடிற்கு என்று பேரிடர் மேலாண்மை சட்டவிதிகள் இயற்றப்பட வேண்டும்.

  3. தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை அமைப்பு தற்போது வருவாய் துறையோடு செயல்பட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை தனி அமைப்பாக இருப்பதே அதன் செயல்பாடிற்கு வலு சேர்க்கும். எனவே பேரிடர் மேலாண்மை என்பது தனி துறையாக மாற்றப்பட வேண்டும். தீயனைப்பு மற்று மீட்பு துறையோடு பேரிடர் மேலாண்மை துறை இனைந்து செயல்பட வேண்டிய வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மை அமைப்புகள், குழுக்கள் மாவட்டம் தோறும் உருவாக்கப்பட வேண்டும்.

  4. ஆழ்துளை கிணறு குறித்தான தமிழக சட்டமான Tamil Nadu Municipalities (Regulation of Sinking of Wells and Safety Measures) Rules 2015, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

  5. ஆபத்து அல்லது நெருக்கடி காலத்தில் செயல்படுத்த வேண்டிய Standard Operating Procedure வரையறை செய்யப்பட வேண்டும்.

  6. தமிழகத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் தரவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அந்தந்த கிராமங்களில், தாலுக்காக்களில், மாவட்ட அளவில் எல்லா அதிகாரிகளுக்கும் கிடைக்கும் படி இணையத்தில் சேமித்து வைக்கப்பட வேண்டும், நகலாகவும் வைக்கப்படவேண்டும்.

  7. தோல்வி அடைந்த ஆழ்துளை கிணறுகளில் மூடவேண்டியவற்றை மூடுவதற்கும், அல்லது “செயற்கை மீள்நிரப்பல்” மூலமாக நிலத்தடிநீரை மீள்நிரப்புவது என்று முடிவெடுத்தால் அதற்குரிய நடவடிக்கைகளையும் அரசே அதற்கு பொறுப்பேற்று முன்னின்று நடத்தவேண்டும்.

  8. இதைப்போன்ற விபத்து காலங்களில் பயன்படுத்தக்கூடிய கருவிகளை தருவித்து, அந்த கருவிகளை நம் மண்ணில் உள்ள ஆள்துளை கிணறுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து, இரண்டு மாவட்டங்களுக்கு ஒன்று என தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். அந்த கருவிகள், அதன் ஆயுள் முழுவதிற்கும் பயன்படாமல் போகட்டும், ஆனால் நாம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்தக் கருவியை இயக்க தீயணைப்பு படை அல்லது பேரிடர் மீட்பு குழுவிற்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.

  9. ஒருவேளை, கருவிகளை வைத்து மீட்டெடுக்க முடியாமல் போனால், அடுத்த கட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வல்லுநர் குழுவும் தயார் நிலையில் இருக்கவேண்டும், அவர்களும் என்ன செய்யவேண்டும் என்ற "இயக்க நடைமுறைகள்" (standard operating procedures) உருவாக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.

  10. தமிழகத்திலுள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு போதிய தரவுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படவேண்டும்.

  11. வல்லுநர்கள், விஞ்ஞானிகள் என எல்லோரையும் கலந்தாலோசித்து ஆழ்துளை கிணறுகளின் விட்டதை (diameter) குறைக்க முயல வேண்டும்.

  12. எல்லா பேரிடர்கள் குறித்தும், முன் தயாரிப்பு நிலை, நெருக்கடி மேலாண்மை உள்ளடங்கிய பேரிடர் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

  13. ஆழ்துளை கிணறுகள் தோல்வியடைவதற்கு முக்கிய காரணம், நீர்மேலாண்மை தோல்வியில் முடிந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோனதுதான். இனிமேலாவது நீர்மேலாண்மையில் நாம் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் மற்றும் தமிழகத்தில் உள்ள அணுமின்நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகள், அனல் மின்நிலையங்கள் ஆகையவற்றால் இனிவரும் காலங்களில் கடற்கரை மாநிலமான தமிழ்நாடு அதிகமான பேரிடர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

வடிவமைக்கப்படாத (beyond design incidents) பல பேரிடர்களை நாம் சந்திக்கவும் நேரிடலாம், அதையும் எதிர்கொள்ளவேண்டிய காலகட்டத்திற்கு வந்துள்ளோம். நம்முடைய கட்டமைப்புகளை எந்தவித பேரிடர்களை சந்திக்கவும் தயார்படுத்துவதுதான் சுஜித்திற்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.