Tamilnadu

பீரோவுக்கு டூப்ளிகேட் சாவி.. ஆளில்லாத நேரத்தில் திருட்டு - வேலை செய்த வீட்டிலேயே ‘வேலை’யைக் காட்டிய பெண்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிப்பவர் பெரியண்ணன் (33). தொழில் அதிபரான இவரது வீட்டில் தரமணியைச் சேர்ந்த உஷா (53) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.

பெரியண்ணன் வீட்டின் படுக்கையறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருக்கும் பணம் அவ்வப்போது குறைந்து வந்துள்ளது. வெளியாட்கள் யாரும் வராத நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருக்கும் பணம் குறைவது கண்டு குழப்பமடைந்துள்ளார் பெரியண்ணன்.

இதற்கிடையே, சில நாட்களாக உஷா வேலைக்கு வரும்போது ஒவ்வொரு நாளும் புதிய நகைகள் அணிந்து வந்துள்ளார். இதனால் பெரியண்ணன் சந்தேகமடைந்து படுக்கறையில் ரகசிய Pen கேமரா ஒன்றைப் பொருத்தி ஆய்வு செய்து வந்தார்.

அதில், வீட்டுப் பணிப்பெண் உஷா படுக்கையறைக்குள் வருவதும், சாவியை வைத்து பீரோவைத் திறப்பதும் பதிவாகியிருந்தது. சாவி தன்னிடம் மட்டுமே இருக்கும் நிலையில் வேறொரு சாவியை வைத்து திருடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியண்ணன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலிஸார் வழக்குப் பதிவு செய்து பணிப்பெண் உஷா வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லாததால், விசாரித்து தாம்பரத்தில் தங்கியிருந்த அவரைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

உஷா, பீரோவுக்கு டூப்ளிகேட் சாவி தயாரித்து, யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து பல நாட்களாக 25 லட்சத்திற்கும் மேல் திருடியது தெரியவந்தது. மேலும், பணத்தைத் திருடிய உஷா தனக்கும் தனது மகளுக்கும் 40 சவரன் நகைகளை வாங்கி குவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, உஷாவை கைது செய்த போலிஸார் அவரிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், திருடிய பணத்தை எங்கு வைத்திருக்கிறார் என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.