Tamilnadu

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - நாளை மழை அடித்து நொறுக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை!

தென் தமிழகம் மற்றும் குமரிக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலாகவும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி குழித்துறையில் 14 செ.மீ, பெரியநாயக்கன்பாளையத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலை நாளை வரை நீடிக்கும் என்றும் அடுத்த 48 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், குமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.,22) கனமழை பெய்யக்கூடும் என் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதில், நீலகிரியில் மட்டும் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதியில் இன்றும் நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.