Tamilnadu

பழைய கடனுக்காக விவசாயிகளின் காப்பீட்டு தொகையில் கை வைவைப்பதா? வங்கிகளுக்கு இரா.முத்தரசன் கண்டனம்!

விவசாயிகள் கடன் பெற்று சாகுபடி செய்யும் பயிர்கள் இயற்கை சீற்றங்களாலும், நோய் தாக்குதலாலும் சேதமடைந்து விடும் போது இழப்பீடு பெறுவதற்காக பயிர் காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும் உதவிகளை விட காப்பீட்டு நிறுவனங்கள் அதீத லாபம் சம்பாதித்து வருகின்றன.

ஆனாலும் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அரைகுறை இழப்பீட்டு தொகையை விவசாயிகள் பெற்று வருகின்றனர். இந்தக் காப்பீட்டு தொகை பெரும்பான்மை விவசாயிகளுக்கு வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் இழுத்தடிப்பு செய்து வருகின்றன. இந்த நிலையில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

வங்கிகளுக்கு வரும் பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகள் பெற்ற கடன் கணக்கில் வங்கிகள் வரவு வைத்துக் கொண்டு விவசாயிகள் பாக்கிக் கடனை உடனடியாக செலுத்துமாறு வங்கிகள் நிர்பந்தித்து வருகின்றன.

இதே போல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் வங்கிகளுக்கு வரும் போது, கணவர் வாங்கியிருக்கும் வங்கிக் கடனுக்கு மனைவியின் ஊதியத்தை வரவு வைத்துக் கொள்வதும், மனைவியின் கடனுக்கு கணவரின் ஊதியத்தை வரவு வைத்துக் கொள்வது என்ற நடைமுறையை வங்கிகள் பின்பற்றி வருகின்றன.

நாட்டின் குழும நிறுவனங்களின் (கார்ப்ரேட் கம்பெனிகள்) கோடிக் கணக்கில் தள்ளுபடி செய்தும், லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகை வழங்கியும் வரும் திரு நரேந்திர மோடியின் பா.ஜ.க மத்திய அரசு, அன்றாடம் உடல் உழைப்பு செய்து, உயிர் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் ஊதியத்தை கடனுக்காக பிடித்துக் கொள்வதும், சாகுபடி செய்த பயிர்கள் சேதமடைந்த நிலையில் கிடைக்கும் பயிர் காப்பீட்டு தொகையை பழைய கடனுக்கு வரவு வைப்பதும் சட்ட அத்துமீறல் நடவடிக்கைகளாகும்.

விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் போன்றவைகளை பழைய கடன்கள் கணக்கில் வரவு வைக்கும் வங்கிகளின் அத்து மீறிய செயல்களை மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் மூலம் உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை, விவசாயத் தொழிலாளர் ஊதியம் போன்றவைகள் பிடித்தம் இல்லாமல் முழுமையாக கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.