Tamilnadu

“பா.ஜ.க-அ.தி.மு.க அரசுகளுக்கு பாடம் புகட்டிட தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்” - முத்தரசன் வேண்டுகோள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 21ல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளப் பெருமக்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாநில உரிமைகளைப் பறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படக் கூடிய மத்திய அரசுக்கு தக்க பாடம் புகட்டவும், மாநில உரிமைகள் - நலன்கள் குறித்து சிறிதும் கவலைப்படாமல் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் எடப்பாடி அரசுக்கு தக்க பாடம் புகட்டவும், தி.மு.க - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரும் இரு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசு நிராகரித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, கடந்த 28 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு நிராகரித்தது.

இவைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள மாநில அரசு முன்வராமல் மத்திய அரசின் நயவஞ்சக முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி அரசு கைகட்டி வாய்ப்பொத்தி ஏற்றுக் கொள்கிறது. கிராமம் முதல் உயர் மட்டம் வரை ஊழல் கரைபுரண்டு வெள்ளமென பெருக்கெடுத்து பாய்கிறது.

தமிழ்நாடு காவல்துறை களங்கப்பட்டு நிற்கின்றது. (ரூ.350 கோடி ஊழல்) சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டது. சிறு கொள்ளை முதல் பெருங்கொள்ளை வரை தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது. கொள்ளையர்கள் சிறிதும் அச்சமின்றி செயல்பட்டு வருகின்றனர். திருடச் செல்கிற இடத்தில் (வீட்டில்) பிரியாணி சமைத்து சாப்பிடவும், சாவகாசமாக நீர் பருகவும், ஊஞ்சல் ஆடி மகிழவும் அவர்களால் முடிகின்றது.

கூலிப்படை நாளுக்கு நாள் பலமடைந்து கொலை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. சட்டம் - ஒழுங்கு மிகச் சரியாகவே இருக்கின்றது என்று முதலமைச்சர் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் எதார்த்தம் அவ்வாறு இல்லை என்பது மக்களுக்கு மட்டுமல்ல, அவரது மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.

தலைமைச் செயலகத்தில் நான்கு துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு, நான்காயிரம் பொறியியல் படித்த பட்டதாரிகள் விண்ணப்பம் செய்வதன் மூலம், வேலையின்மை கொடுமை எந்த அளவிற்கு தமிழகத்தில் உச்சத்தில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.

இத்தகைய நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டிட இரு தொகுதிகளிலும் தி.மு.க - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.