Tamilnadu

’எவன்கிட்ட வேணாலும் போய் சொல்லு’ : குட்கா அமைச்சரின் கீழ்த்தரமான செயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கண்ணீர்!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநகரத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 28 மற்றும் 29ம் தேதிகளில் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றிருந்தது. இந்நிலையில் 561 பேருக்கு இரண்டாம்கட்ட கலந்தாய்வுக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், 131 மாணவர்களே கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களை குட்கா ஊழல் புகாருக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான அன்னை தெரசா மற்றும் கிருஷ்ணா, எக்செல் ஆகிய மூன்று இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் சேரச்சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

அமைச்சரின் கல்லூரியில் சேர மறுத்த மாணவர்களை மற்ற கல்லூரிகளில் இடமிருந்தும், சேரவிடாது வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இந்த இரண்டாம்கட்ட கலந்தாய்வில் 1 அரசுக் கல்லூரி மற்றும் 9 தனியார் கல்லூரிகள் இடம்பெற்றிருந்தன.

இதுவரை அரசு கல்லூரியில் 1 மாணவர் கூட சேர்க்கப்படாத நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அன்னை தெரசா மருத்துவக் கல்லூரியில் மட்டும் 89 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அதிருப்தி தெரிவித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில், ‘எவன்கிட்ட வேணாலும் போய் சொல்லிக்கோங்க... அமைச்சர மீறி இங்க ஒண்ணும் பண்ண முடியாது’ என்று அங்கிருந்த அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இதனால், பல மாணவர்கள் தங்களது மருத்துவக் கனவு பறி போனதை எண்ணி கண்ணீர் வடித்தபடி அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் என சொல்லிக்கொண்டாலும், விஜயபாஸ்கருக்கு குட்கா, கமிஷன் விவகாரத்தை கவனிப்பதற்கே நேரமில்லையாம். அதில் தற்போது இந்த கல்லூரி விவகாரமும் சேர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.