Tamilnadu
ஓர் எலியைப் பிடிக்க ரூ.22,000 செலவு செய்த ரயில்வே : 3 ஆண்டுகளில் எவ்வளவு தெரியுமா? - RTI அதிர்ச்சி தகவல்!
ரயில் நிலையங்களில் திரும்பும் பக்கமெல்லாம் எலிகள் சுற்றித்திரியும், அதனைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆதங்கத்துடன் கடந்து சென்றுவிடுவோம். சில நேரங்களில் ரயில் பெட்டிகளுக்குள் எலிகள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இதுபோல எலி, பூச்சிகள் தொல்லை புகார்கள் வருவதன் காரணமாக சரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என அவ்வப்போது ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
தென்னிந்திய ரயில்வேயின் சென்னை போன்ற பெரிய ரயில் நிலையங்களில் இருந்து சரக்குப் போக்குவரத்து சேவை அதிகளவில் நடந்து வருகிறது. இதனால் சரக்குகளை தேக்கிவைக்கும் பகுதியில் எலிகள் தொல்லை அதிகமாவதால் ரயில்வே நிர்வாகத்திற்கு பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மே மாதம் 2016-ம் ஆண்டு முதல் ஏப்ரல் வரை எலிகள் அச்சுறுத்தலை சமாளிக்க எவ்வளவு செலவானது என சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த ஜூலை 17ம் தேதி ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு சென்னை மண்டல ரயில்வே நிர்வாகம் பதில் அறிக்கை அனுப்பியிருந்தது. அதில், சென்னை மண்டல ரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான எலி தொல்லையால் சிரமங்களையும், சேதாரங்களையும் சந்தித்து வருகிறது என்றும் அதிகாரிகளும் எலிகளை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்,எலிகளை கட்டுப்படுத்த கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, 2018 முதல் 2019ல் மட்டும் 2,636 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பதில் அளித்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, தாம்பரம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 1,715 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 921 எலிகள் ரயில்வே பயிற்சி மையத்தில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தோராயமாக ஒரு எலியைப் பிடிக்க 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு செலவு செய்தும் எலி தொல்லையை கட்டுப்படுத்த முடியாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரிக்கவேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!