Tamilnadu

முக்கிய குற்றவாளி திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் : நகைக் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரம்!

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதியன்று கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். நகைக்கடையில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

இதுவரை கொள்ளை தொடர்பாக மணிகண்டன், முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்திய திருவாரூர் முருகன் தான் மூளையாக இருப்பது தெரியவந்தது.

கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் முருகனை போலிஸார் தேடிவந்தனர். நேற்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். இந்நிலையில், முருகன் இன்று காலை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை, திருச்சி தனிப்படை போலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். திருச்சி கொள்ளை வழக்கு தவிர முருகன் கும்பல் சென்னையில் 19 இடங்களில் கைவரிசை காட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.