Tamilnadu

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா, அவரது தந்தைக்கு 15 நாட்கள் காவல் நீட்டிப்பு!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யாவும், அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் கடந்த 25ம் தேதி திருப்பதியில் வைத்து தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.

அதன் பிறகு, 26ம் தேதி அதிகாலை தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அன்று இரவே தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், உதித் சூர்யாவையும், அவரது தந்தை வெங்கடேஷையும் நீதிமன்றக் காவலில் அடைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இருவரது நீதிமன்றக் காவலும் முடிவடைந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்து தேனி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டு அக்.,24ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதனையடுத்து உதித் சூர்யாவும், வெங்கடேஷும் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் பூதாகரமாக வெடித்து மேலும் பல மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஆகையால் இந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.