Tamilnadu

திருச்சி கொள்ளை வழக்கில் போலிஸ் தேடிய முக்கிய கொள்ளையன் நீதிமன்றத்தில் சரண்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் 2ம் தேதி அதிகாலை ஜூவல்லரியின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் 13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

லலிதா ஜூவல்லரி கொள்ளை தொடர்பாக திருச்சி மாநகர போலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இதனிடையே அக்டோபர் 3ம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் தப்பி ஓடினார்.

சுரேஷின் தாயார் கனகவள்ளி கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களாக காவல்துறையினர் சுரேஷை தேடி வந்தனர்.

இந்நிலையில், லலிதா ஜுவல்லரி கொள்ளை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவாரூர் சுரேஷ் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ( பொறுப்பு) விக்னேஷ் பிரபு முன்னிலையில் சரண் அடைந்தார்.

மேலும், லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மூளையாகச் செயல்பட்ட திருவாரூர் முருகனை போலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.