Tamilnadu

தமிழகத்தில் இத்தனை பேருக்கு டெங்கு பாதிப்பா? : சுகாதாரத் துறை அறிவிப்பு!

தமிழகத்தில் இதுவரை 2951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அங்குள்ள நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதேபோல், நிலவேம்பு கசாயத்தைய்ம் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்பதே எங்களது இலக்காக உள்ளது என தெரிவித்தார்.

மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது முதல் 5 நாட்களுக்கு தெரியாது. அதன் பிறகே காய்ச்சல் பாதிப்பு குறித்து தெரியவரும் என்றார். சென்னையை பொறுத்தவரை வட சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அந்த பகுதிகளிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறிய பீலா, டெங்குவால் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார் என்றார்.