Tamilnadu

ரயில்களில் வடமாநிலங்களுக்குப் பயணிக்கும் ஈரோட்டு இட்லி... விற்பனையில் கலக்கும் ‘இட்லி சந்தை’!

இட்லி விற்பனைக்கென்றே ஈரோட்டில் இட்லி சந்தை இயங்கி வருகிறது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இருக்கும் 10 கடைகளிலும் இட்லி விற்பனை வெகுஜோராக நடைபெறுகிறது. அங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இட்லிகள் சப்ளை ஆகின்றன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தொடங்கப்பட்டு, நியாயமான விலையில் ஏழைகளின் பசியினை ஆற்றிவந்த இட்லி விற்பனையகம் தான் இன்றைய இட்லி சந்தைக்கு முன்னோடி.

ஈரோட்டில் வசிக்கும் வட இந்தியர்கள் மற்றும் வீட்டு விஷேசங்களுக்கு உணவு தேவைப்படுவோரின் ஆஸ்தான உணவகமாக இருக்கிறது இந்த இட்லி சந்தை. தமிழகத்திற்குள் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் ரயிலில் பயணிக்கிறது ஈரோட்டு இட்லி.

மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கே, இங்கிருந்துதான் இட்லிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாம். இட்லி சந்தையில் சதாரண நேரங்களிலும், நாள் ஒன்றிற்கு 20,000க்கும் மேற்பட்ட இட்லிகள் விற்பனையாகிறது.

ஒரே நேரத்தில் 80 இட்லிகள் வேகும் வகையிலான பெரிய குண்டாவில் இட்லிகள் தயாராகின்றன. விறகு அடுப்புகளைப் பயன்படுத்தியே இன்னும் அங்கு கடை நடத்தப்படுகிறது.

அதிகாலை 5 மணிக்கு கடையைத் திறந்தால் முற்பகல் 11 மணி வரை இட்லி விற்பனை சுடச்சுட நடைபெறும். உணவகங்களில் இருந்தும் வாடிக்கையாக, இட்லி ஆர்டர்கள் வருகின்றன.

கலப்படம் இல்லாத மூலப் பொருட்களைப் பயன்படுத்தியே இட்லி தயாரிக்கப்படுகிறது. விளம்பரம் இல்லாமல், கவர்ச்சிகரமான எந்த வசதியும் இல்லாமல், சுவையையும், தரத்தையும் மட்டுமே நம்பி அமோகமாக நடைபெறுகிறது இட்லி வியாபாரம்.