Tamilnadu

“மனைவியின் வீடியோவை நண்பனுக்கு அனுப்பிய கணவர்” : தட்டிக்கேட்டதால் தப்பி ஒட்டம்!

சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் செலின். புதுக்கோட்டை மஜூவாடியை சேர்ந்த அருண் என்பவரும் அந்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர்,செலின் கடந்தாண்டு பெங்களூரு கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் பின்னரும் செலினும், அருணும் போனில் தங்களது நட்பைத் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் செலினை காதலிப்பதாக அருண் கூறியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் அருண் மீதிருந்த நம்பிகையால் காதலுக்கு சம்மதித்துள்ளார் செலின். பின்னர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சென்ற அருண் செலினை சந்தித்து திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, அடிக்கடி பெங்களூரு சென்ற அருண் ஒருகட்டத்தில் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு செலினை அழைத்துச் சென்று பலவந்தப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செலினை சமாதானப்படுத்தி, விரைவில் திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதற்கு அவரது நண்பர் மணி உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல திருமணம் பற்றி பேசாமலும், உறவை முறித்துக்கொள்ளும் வகையில் அருண் நடந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. திருமணம் குறித்து செலின் கேள்வி எழுப்பியபோது, இனி திருமணம் நடக்காது எனக் கூறிவிட்டு முழுமையாக தொடர்பை விலகிக்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செலின் அருண் மீதும், அவரது நண்பர் மீதும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் அருண் மற்றும் மணியைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அருண் மீது தவறு உள்ளது என்று தெரிந்ததால், செலினை திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவோம் என எச்சரித்துள்ளனர்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவோம் என பயந்து, திருமணத்திற்கு அருண் அப்போது ஒப்புக்கொண்டுள்ளார். அதனையடுத்து இருவீட்டாரும் பேசி, கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கோவிலில் திருணம் நடைபெற்றது. அதனையடுத்து கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதிவு செய்துகொண்டனர்.

இதனையடுத்து பெங்களூருவில் குடியேறி அருணும் செலினும் வாழ்ந்து வந்துள்ளனர். வேலைக்குச் செல்லாமல் அருண் வீட்டிலேயே இருந்ததாகவும் அதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அருண், செலினுடன் இருந்த வீடியோ ஒன்றை அவரது நண்பனுக்கு அனுப்பியதை செலின் பார்த்துள்ளார்.

இதனால் அத்திரத்தில் செலின் அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் இதைப்பற்றிச் சொல்லப்போவதாகவும் எச்சரித்துவிட்டு, வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் அருண் இல்லாததைக் கண்டு செலின் அதிர்ந்து போனார்.

அருண் அங்கிருந்து திருவண்ணாமலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அருணை தேடி, செலின் அங்கு சென்றுள்ளார். அப்போது அருண் வீட்டார் செலினை மிரட்டியதாகவும், தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அருண் குடும்பத்தினர் தன்னை தாக்க முயற்சி செய்வதாகவும், கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கவேண்டும் எனவும் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் செலின்.

செலின் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் அருண் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அருணிடம் இருந்து விவாகரத்து பெற்று மருமணம் செய்துகொள்ளுமாறு செலின் வீட்டார் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.