Tamilnadu
“தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை பறைசாற்றும் கீழடி” - அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்!
கீழடி அகழாய்வுப் பகுதிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் சி.பி.எம் எம்.பி., சு.வெங்கடேசன் மற்றும் தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர்.
கீழடியில் ஆய்வு மேற்கொண்ட பின், தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை பறைசாற்றும் விதமாக கீழடி உள்ளது. இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய தொல்லியல் துறை அதிகாரிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் போன்றே இந்த முயற்சி தொடரவேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் இனிமேல் தான் அதிகமான கவனத்தைச் செலுத்தி இதில் ஈடுபடவேண்டும். இந்த ஆய்வில் கி.மு.க 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்களின் நாகரிகம் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை ஓடுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
கீழடிக்குப் பிறகு ஆய்வு தொடங்கப்பட்ட சனோலி என்கிற பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, குஜராத் மாநிலத்தின் வாட் பகுதியும் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கீழடியிலும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும்.
கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன்னால் தி.மு.க எம்.பி., கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் ஆகிய மூவரும், கீழடியில் இருக்கக்கூடிய பிரச்னைகளையெல்லாம் மத்திய இணை அமைச்சரிடம் எடுத்துரைத்திருக்கிறார்கள். ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தொடரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தான் தொடங்கப்படவேண்டும் என பல அறிஞர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஆனால், இப்போது அந்த வரலாறு குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்படவேண்டும் என கீழடி மூலம் தெளிவாகியிருக்கிறது.
எனவே, நம் பண்பாடு காப்பாற்றப்படவேண்டும்; நம் கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும். இந்த முயற்சியிலே மத்திய அரசும், மாநில அரசும் ஈடுபட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!