Tamilnadu

24 மணிநேரத்தில் இரு அப்பாவி பெண்களை பலியாக்கிய மாநகர பேருந்துகள்: சென்னை வடபழனியில் பரபரப்பு!

சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்து மோதியதால் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியத்துள்ளது.

கே.கே.நகர் பாபுஜி ராஜா சாலை பகுதியைச் சேர்ந்த கதிரேசனின் (55) மனைவி மீனா (50). இவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில், தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக வடபழனி பேருந்து நிலையம் அருகே வந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த 570 வழித்தட எண் கொண்ட மாநகர பேருந்து ஒன்று மீனா மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரண்டு கால்களிலும் காயமடைந்த அந்த பெண்மணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு பணிமனை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மீனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மீனாவின் கணவர் கதிரேசன் அளித்த புகாரின் படி அதிவேகமாக வாகனத்தை இயக்கியது மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக செயல்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கம் நோக்கிச் சென்ற மாநகர பேருந்து நடத்துநன் முருகானந்த் குமரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான பஸ் ஓட்டுநர் ராஜேந்திரனுக்கு போலிஸார் வலைவீசியுள்ளனர்.

இதேபோன்று, சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி கலைச்செல்வி என்ற பெண் கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வடபழனி துரைசாமி சாலை வழியே சென்றபோது 12பி தடம் எண் கொண்ட மாநகர பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய பஸ் ஓட்டுநரையும், நடத்துநரையும் கிண்டி போக்குவரத்து போலிஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் ஒரே பகுதியில் மாநகர பேருந்துகள் மோதியதில் இரண்டு அப்பாவி பெண்கள் உயிரிழந்த சம்பவம் வடபழனி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு, மாநகர பேருந்து மீதான அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.