Tamilnadu
வேலையே செய்யாமல் சும்மா இருந்த அதிகாரிக்கு காவல்துறை விருதா ? - கொந்தளிக்கும் பொன்.மாணிக்கவேல்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏ.டி.எஸ்.பி இளங்கோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.டி.எஸ்.பி இளங்கோ கடந்த 2017-ம் ஆண்டு இறுதி முதல் 2019 ஆம் ஆண்டு தொடக்க காலம் வரை சுமார் ஒன்றரை ஆண்டு சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றினார். இவர் மீது காவல்துறை அதிகாரிகளே புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 2018 - 2019ம் ஆண்டுக் காலத்தில் இவர் எந்த ஒரு குற்றவழக்கையும் எடுத்து விசாரிக்காமல் மெத்தனப்போக்குடன் ஒழுங்கினமாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் அளிக்கவேண்டிய சொத்துப்பட்டியல் விபரங்களை எட்டு ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவருக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆண்டு இறுதி அறிக்கையில் அப்போதைய காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரனிடம் வழங்கினார்கள். ஆனால் இளங்கோவிற்கு இருந்த செல்வாக்கு காரணமாக அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றனர்.
அதே நேரம் அதிகாரி இளங்கோவும் சக போலிஸ் அதிகாரிகளை அழைத்துச் சென்று சிலை கடத்தல் பிரிவு தலைமை அதிகாரியான பொன்மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டு மனுவை டி.ஜி.பி-யிடம் வழங்கினார். இது காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்த சிறிது நாளில் ஏ.டி.எஸ்.பி இளங்கோ கடலோர காவல்படைக்கு மற்றப்பட்டார். அதன்பிறகும் கூட எந்த ஒரு அதிரடி நடவடிக்கையோ அல்லது சிறப்பு விசாரணையோ மேற்கொள்ளாமல் இருப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அவருக்கு அண்ணா பதக்கம் அறிவித்திருப்பது மேலும் காவல்துறையினர் மத்தியில் எரிச்சலைக் கிளப்பியுள்ளது.
இதனால் எரிச்சல் அடைந்த போலிஸ் அதிகாரிகள் ஏ.சி.ஆர் என்னும் ஆண்டு பணி ஆய்வு அறிக்கை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதனைமறைத்து அவரின் பெயரை விருதுக்கு பரிந்துரை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி காவல்துறை இயக்குனர் திரிபாதி மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கும் புகார் கடித்தத்தை அனுப்பியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அளித்த ஆண்டறிக்கையில், “இளங்கோ திறமையற்ற அதிகாரி என்றும், தன்னுடைய பணி காலத்தில் ஒரே ஒரு கைதோ, குற்றப்பத்திரிகையோ கூட தாக்கல் செய்யாதவர் என்று குறிப்பிட்டதோடு, வழக்கு விசாரணை நடைமுறைகள் தெரியாதவராகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காதவராகவும் இருந்ததோடு, முன் அறிவிப்பு இன்றி பல நாட்கள் விடுப்பு எடுத்து சென்ற Very Very Poor Officer என குறிப்பிட்டு அந்த அறிக்கையை அனுப்பி இருக்கிறார்.
மேலும், இளங்கோ அளித்த சுயமதிப்பீட்டு அறிக்கை முழுக்க முழுக்க போலியானது என்றும் ஒட்டுமொத்தமாக தரப்படும் 10 மதிப்பெண்களில் இளங்கோவிற்கு பொன்.மாணிக்கவேல் 1.25 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கி அந்த ஆண்டறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இதுமட்டுமன்றி, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் உயர் போலீஸ் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் ராஜராஜன் , கல்லிடைகுறிச்சி நடராஜர் சிலைகளை நாடுகள் கடந்து மீட்டு வந்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கையால் அரசுக்கு இழுக்கு ஏற்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏ.டி.எஸ்.பி இளங்கோ,“தன்மீதுள்ள புகாருக்கு டிஜிபியிடம் தக்க விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், 8 ஆண்டுகள் சொத்துவிவர அறிக்கை மட்டுமே தான் தாக்கல் செய்யவில்லை , அதையும் விரைவில் தாக்கல் செய்து விடுவேன்.
என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கிலேயே பொன்.மாணிக்கவேல் எனக்கு விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் என்றும், அவர் மீது நான் கொடுத்த புகார்களை மனதில் வைத்து இதுபோன்று உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காவல்துறை மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!