Tamilnadu

“இரண்டு வாரங்களுக்கு மழை... மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை ரெடியா வெச்சிருங்க..!” - வெதர்மேன் கணிப்பு!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்யாத பகுதிகளில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு வெப்பச் சலன மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளார் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்யாத பகுதிகளில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு வெப்பச் சலன மழை பெய்யும்.

இதன் காரணமாக சென்னையின் தண்ணீர் பற்றாக்குறை தீரும் எனச் சொல்ல முடியாது. ஆனால், தென்மேற்குப் பருவ மழைக்காலம் முடிவடைவதற்கு முன்பே, சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு சென்னையின் பல இடங்களில் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இன்று இரவு மழை இல்லாமல் போனால் நிச்சயம் நாளை மழை பெய்யும். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆகவே, வீடு, கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை எல்லோரும் பராமரித்து வைத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார் ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான்.