Tamilnadu

விநாயகர் சதுர்த்தியின் பெயரில் அராஜகம் : நன்கொடை கொடுக்காத பனியன் கம்பெனியை சூறையாடிய இந்து முன்னணியினர்!

தமிழகத்தில் இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வன்முறை நிகழ்வை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக இந்து முன்னணி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில், திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ண‌ர் சிலை வைப்பதற்காக அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள சிவா என்பவரிடம் அதிக பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் அதுபோன்ற வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையம் பகுதியில் தனியார் பனியன் கம்பெனி ஒன்று செயல்படுகிறது. இந்த கம்பெனிக்கு அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் சென்று விநாயகர் சிலை வைக்கவேண்டும் என்று பணம் கேட்டுள்ளனர்.

பணம் கொடுக்க மறுத்த பனியன் கம்பெனி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கம்பெனியின் கண்ணாடி கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்தும், அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் பைப் கொண்டு இந்து முன்னணியினர் கம்பெனி ஊழியர்களைத் தாக்கியதில் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பனியன் கம்பெனியினர் அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின்போது நன்கொடை கொடுக்காததால் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதாக ஊழியர்கள் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு குழுவிற்கு முன்பே பனியன் கம்பெனியினர் பணம் கொடுத்துவிட்டதாகவும், இரண்டாவது முறை வந்த மற்றொரு குழுவிற்கு பணம் தராததால் ஆத்திரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.