Tamilnadu

குழந்தைக்குப் பாதரசம் கொடுத்த மூதாட்டி : மூட நம்பிக்கையால் ஐ.சி.யூ-வில் உயிருக்குப் போராடும் விபரீதம்

நாகை மாவட்டம் பெருமஞ்சேரியைச் சேர்ந்தவர் சரவணன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி சுமித்திராவிற்கு கடந்த மாதம் 16ம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

ஆரோக்கியமாக இருந்த தாயும் சேயும் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாகக் குழந்தையின் வயிறு வீங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது குழந்தை கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்துள்ளது.

குழப்பமடைந்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துப்பார்த்துள்ளனர். குழந்தையின் வயிற்றில் கட்டி போன்ற பொருள் இருப்பதைப் பார்த்து, குழந்தைக்குக் கொடுக்கப்பட்ட உணவு குறித்து குழந்தையின் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு நாட்டு வைத்திய முறைப்படி வெற்றிலைச் சாற்றில் பாதரசத்தைக் கலந்து கொடுத்ததாகப் பெற்றோர் கூறி உள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக குழந்தையை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது அபாயக் கட்டத்தை தாண்டி உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதரசம் மற்றும் வெற்றிலைச்சாறு கொடுத்தால், குழந்தையின் நிறம் சிவப்பாகும் என நம்பி, பலரும் குழந்தைகளுக்குப் பாதரசம் கொடுக்கின்றனர். இது ஒரு மூட நம்பிக்கை. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.