Tamilnadu

ஊட்டிக்கு போறீங்களா... உஷார்! - மலை ரயில் பாதையில் செல்ஃபி எடுத்தால் 2 ஆயிரம் அபராதம் ! 

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று உதகமண்டலம். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணிப்பதில் உற்சாகம் அடைந்து வருகிறார்கள்.

உதகை -மேட்டுபாளையம், உதகை - குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் தினம்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு ரயில் சேவைகளும் சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்றவை.

ஊட்டி மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி, மலை ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, ரயில் முன்பு நின்று செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற செயல்களை தடுக்கும் விதமாக ஊட்டி மலை ரயில் நிர்வாகம், தண்டவாளங்களில் அத்துமீறும் பயணிகளை தடுக்கும் வகையிலும், ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கவும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

மலை ரயில் நிலையத்தில் குப்பைகளை வீசினால் ரூ.200ம், எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தலுக்கு ரூ.300 ம், ரயில் நடைமேடையில் கட்டணம் செலுத்தாமல் ரயில் நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.ஆயிரமும் அபராத கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

மலை ரயில் நிலையம் மற்றும் மலை ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று செஃல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.2 ஆயிரமும், ரயில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்களுக்கு ரூ. ஆயிரமும் இந்திய ரயில்வே சட்டத்தின்படி அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி செல்லும், செஃல்பி மோகம் கொண்ட சுற்றுலாப் பயணிகளே உஷார்... உஷார்!