Tamilnadu

பதவி உயர்வுக்கு 40 லட்சம்.. இடமாறுதலுக்கு 15 லட்சம் : லஞ்சத்தில் திக்குமுக்காடும் போக்குவரத்துத்துறை! 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், ஒவ்வொரு அரசுத் துறைகளையும் முன்னேற்றுவதற்கு துறை அமைச்சர்கள் பாடுபடுகிறார்களோ இல்லையோ, முறைகேடுகளிலும், லஞ்ச லாவண்யங்களிலும் நம்பர் 1 ஆகத் திகழ்வது யார் என்கிற போட்டியே நடைபெறுகிறது எனலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல்கள் பல்லிளிக்கின்றன.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் துணை போக்குவரத்து ஆணையர் பதவியின் 7 காலிப் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்படவுள்ளன. இதற்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு போக்குவரத்துத் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் பதவி உயர்வு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடங்களுக்கும் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலவே, ஒவ்வொரு பதவிக்கான இடமாறுதலுக்கும், பதவியைப் பொறுத்து லஞ்சத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

லஞ்சம் கொடுப்பவர்களை பணம் கொழிக்கும் பதவிகளிலும், இந்த முறைகேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் டம்மியான பதவிகளுக்கும் மாற்றி கல்லா கட்டி வருகின்றனர் போக்குவரத்துத் துறையின் உயரதிகாரிகள். இதற்கெல்லாம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் பங்கு செல்கிறதாம்.

பெரும் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு பதவிகளை வழங்குவதால், அந்தக் குறிப்பிட்ட அதிகாரிகள் மக்களுக்கும் சரிவரப் பணியாற்ற மாட்டார்கள். இதனால், மொத்த நிர்வாகமுமே பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இல்லையென்றால், துறை நஷ்டத்தில் இயங்குகிறது எனக் கணக்குச் சொல்லி, பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி மக்களின் தலையில் சுமையை வைக்கும் திட்டத்தையே செயல்படுத்துவார்கள்.

ஒவ்வொரு துறையின் நிர்வாகச் சீர்கேடுகளும், முறைகேடுகளும், இறுதியில் பொதுமக்களின் தலையில் தான் விடியும். போக்குவரத்துத் துறையின் முறைகேடுகள் தொடர்ந்தால், மிக விரைவில் அந்தத் துறையே திவாலாகும் என சில அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், இதையெல்லாம் கவனிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் எங்கே?