Tamilnadu
வேண்டாம் என குப்பையில் வீசப்பட்ட இரும்புப் பெட்டியில் தங்கப்புதையல் - பிரமித்து போன கிராம மக்கள்!
ஆரணி அருகே உள்ள சேத்துப்பட்டை அடுத்த ஆவணியாபுரத்தில், பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் ஒன்று உள்ளது. ஒரு காலகட்டத்தில் ஆரணி எஸ்.வி.நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த ஜாகீர்தாரர்கள் இந்த கோயிலை நிர்வகித்து வந்தனர்.
இரும்பு லாக்கர்கள் மூலம் கோவில் நகைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த லாக்கர்கள் தர்மகர்த்தாக்களிடம் வசம் இருந்தன.
இந்த நிலையில் லட்சுமி நரசிம்மர் கோவில் இந்து அறநிலையத் துறை வசம் வந்தது. அப்போது தர்மகர்த்தாவாக இருந்த பெருமாள் பிள்ளை வசம் இருந்த நகைகளை இந்து அறநிலையத்துறையினர் எடுத்து சென்றனர். லாக்கரை மட்டும் விட்டு சென்றனர்.
இந்த லாக்கர் 25 ஆண்டுக்கு மேலாக தர்மகர்த்தா வீட்டிலேயே இருந்தது. தற்போது தர்மகர்த்தாவின் வாரிசுகள் புதிதாக வீடு கட்டி வந்த காரணத்தினால், மேற்கண்ட பழைய இரும்பு லாக்கரை பக்கத்தில் இருந்த குப்பை கொட்டும் இடத்தில் போட்டு விட்டனர்.
குப்பைமேட்டில் இரும்பு லாக்கர் இருப்பதை கண்ட பொதுமக்கள் கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர், பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு வந்தனர். அவர்கள் 800 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரை திறக்க முயன்றனர். முடியாமல் போகவே அதனை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து வேலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் லாக்கர் உடைக்கப்பட்டது.
லாக்கரில் 46 கிராம் தங்கத்தாலி குண்டு, அலுமினியத்தாலான ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா நாணயங்கள், 17 பித்தளை கால் காசு, 2 வெள்ளி மகாலட்சுமி பொட்டு ஆகியன இருந்தது கண்டு திடுக்கிட்டனர். அவை அனைத்தையும் எடுத்துச் சென்று கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
குப்பைமேட்டில் தங்கப்புதையல் கிடைத்தது சேத்துப்பட்டு பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!