Tamilnadu

ஈரோட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒடிசாவில் மனைவியுடன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது !

ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துவந்தவர் ஜெயபாலன். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மாலினி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் ரூர்கேலாவின் கல்லுாரி குடியிருப்பில் வசித்துவந்தனர்.

இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயபாலனின் வீடு தொடர்ந்து திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேமடைந்து அருகில் குடியிருந்தவர்கள் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால், கதவு திறக்கப்படாததால் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலின் பேரில் அங்குவந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே ஜெயபாலனும், அவரது மனைவி மாலினியும் விஷம் அருந்தி இறந்துகிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வீட்டை சோதனையிட்டனர்.

ஜெயபாலன் எழுதிய நான்கு பக்க கடிதம் ஒன்று போலிசாரிடம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், தங்களுக்கு குழந்தை இல்லாததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், தங்களின் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும், இந்த முடிவுக்காக பெற்றோர்கள் தங்களை மன்னிக்க வேண்டும் எனவும் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. போலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டைச் சேர்ந்த பேராசிரியர் குழந்தை இல்லாத காரணத்தினால் மனைவியுடன் தற்கொலை செய்திருப்பது என்.ஐ.டி.,யில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.