Tamilnadu

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை கைவிட்டதாக தகவல்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை எனத் தெரிவித்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இதை ஏற்காத மதுரை உயர்நீதிமன்ற கிளை, திருத்தங்கல் நகர்மன்றத் துணைத் தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது .

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லாததால், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.