Tamilnadu

கொள்ளையனிடமே கொள்ளையடித்த பெண் காவல் ஆய்வாளர் : 2 மாதங்களுக்குப் பின்னர் அம்பலம்!

கடந்த மே மாதம் 17ம் தேதி சாகுல் ஹமீது என்ற கொள்ளையனை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ரயிலில் சொகுசுப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் டிப் டாப் ஆசாமி போல பேசி கோடிக்கணக்கான பணம் கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமானது.

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ரயில்களில் 4 ஆண்டுகளாகத் திருடிய சாகுல் ஹமீது, அந்த பணத்தை கொண்டு மலேசியாவில் ஹோட்டல் ஒன்றும் வாங்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சாகுல் ஹமீதிடம் இருந்து நகைகளும், சில பொருட்களும், 15 ஏ.டி.எம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கொள்ளையன் சாகுல் ஹமீது

இந்த வழக்கை விசாரணை செய்த செண்ட்ரல் ரயில்வே குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரிடம் இருக்கும் வழக்கு ஆவணங்கள் மற்றும் பொருட்களை, புதிதாக பொறுப்பேற்ற வேலு என்ற ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். அதில், ரயில் கொள்ளை தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஏ.டி.எம் கார்டுகளில், இரண்டு ஏ.டி.எம் கார்டுகள் மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து தகவல் அறிந்த ரயில்வே டி.ஜி.பி இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

காவல் ஆய்வாளர் கயல்விழி

இதனையடுத்து விசாரணை அதிகாரியான பெண் காவல் ஆய்வாளர் கயல்விழியை கேட்டபோது 13 கார்டுகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்து, பறிமுதல் செய்தபோது எழுதி வைத்த ஏடிஎம் கார்டுகள் பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்தபோது,பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளின் இரண்டு ஏ.டி.எம் கார்டுகள் மாயமானது உறுதியானது.

அந்த கார்டுகள் தொடர்பாக மும்பையில் உள்ள வங்கி தலைமையிடம் கேட்டபோது , சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் இந்த கார்டுகளை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அனுப்பியது. இதனை அடிப்படையாக வைத்து ரயில்வே போலீசார் பணம் எடுக்கப்பட்ட, ஏ.டி.எம் மையத்தின் சி.சி.டிவியை ஆய்வு செய்த போது ,ரயில் கொள்ளையை விசாரிக்கும் விசாரணை அதிகாரியான பெண் ஆய்வாளர் கயல்விழி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த காட்சி பதிவாகியிருந்தது.

இதை வைத்து மீண்டும் கயல்விழியிடம் விசாரணை செய்தபோது, பணத்தைக் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தயார் செய்து சென்னை காவல் ஆணையருக்கு ரயில்வே காவல்துறை அனுப்பியது. இதை வைத்து ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள கயல்விழியை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.