Tamilnadu
“ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது” : நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் ஆஜராகி வாதிட்டார். மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், அந்த வகையில் நீர் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது நியாயமானது தான் என மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் வாதிட்டார்.
மேலும், ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால் தான் ஆலை மூடப்பட்டதாக முன் வைக்கப்பட்ட வாதம் தவறு எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் போராட்டத்தை ஒரு காரணியாகக் கூறிக்கொள்ளலாம் என்றார்.
தூத்துக்குடி சிப்காட் தொழில் வளாகத்தில் மிகப்பெரிய தொழிற்சாலை என்ற வகையிலும், அதிக கழிவுகளை வெளியேற்றுகிறது என்ற அடிப்படையிலும் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறுவது தவறு எனவும் அவர் தன் வாதத்தில் குறிப்பிட்டார்.
விதிகளை மீறுவது சட்டத்தையே மீறிய செயல் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், அரசியல் சாசனம், நீர் மாசு தடைச் சட்டங்களும் ஆலையை மூட அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது என்றார்.
சுற்றுச்சூழல் மாசு, சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதாலும் ஆலையை இயக்க கூடாது என உத்தரவிடப்பட்டதாகவும், அந்த உத்தரவை மீறி ஆலையை இயக்கியதால் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
அரசியல் சாசனம் 19(1)(ஜி) தொழில் நடத்துவதற்கான உரிமையை வழங்கியுள்ளது எனவும், இந்த உரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்ட மூத்த வழக்கறிஞர், இந்த அடிப்படை உரிமை என்பது தனிநபர்களுக்கானதே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது அல்ல எனவும் வாதிட்டார். அரசுத்தரப்பு வாதம் முடிவடையாததால், விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள வைகோ, ஹரி ராகவன், ராஜு உள்ளிட்டோரின் பதில் மனுக்களுக்கு பதிலளித்து வேதாந்தா தாக்கல் செய்த மனுவில், அரசியல், தனிப்பட்ட லாபத்திற்காக தங்கள் நிறுவனத்துக்கு எதிராகத் தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக கூறியுள்ளது. இந்த வழக்கில் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில் இந்த இணைப்பு மனுதாரர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!