Tamilnadu

கீழடியில் எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி: பழந்தமிழரின் கல்வியறிவை பறைசாற்றும் கண்டுபிடிப்பு!

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் விதமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் எழுத்து வடிவம் பெற்ற முதல் மொழி தமிழ். அத்தகைய மொழிச் செழுமை பெற்ற தமிழர்கள், எழுதுகோலாக எழுத்தாணியை பயன்படுத்தியதாக நாம் படித்திருப்போம்.

அப்படிப்பட்ட ஓர் எழுத்தாணி தான் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தாணி எலும்புகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. எலும்பை தீயில் வாட்டி பக்குவப்படுத்தி, பேனா முனை போன்று கூராக வடிவமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், கீழடியில் வாழ்ந்த பழந்தமிழர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்திருப்பார்கள் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் மூலம் இன்னும் பல வியக்க வைக்கும் உண்மைத் தகவல்கள் வெளிவரலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறை கிணறு கண்டறியப்பட்டது. 40 செ.மீ சுற்றளவு, 50 செ.மீ உயரம் கொண்ட நான்கு உறைகள் கொண்ட அடுக்காக, அந்த கிணறு அமைந்துள்ளது.

எலும்பு எழுத்தாணி

இதற்கு முன்னதாக நீளமான இரட்டைச் சுவர், பல்வேறு வடிவிலான பானைகள், வட்டவடிவிலான பெரிய தாழி உள்ளிட்டவை கிடைத்தள்ளன. மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இத்தனை தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்ட போதும், கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடைய எந்த அடையாளமும் அங்கு கிடைக்கவில்லை. உலகின் மூத்தகுடியான தமிழர்கள், மொழியையும், அறிவையும் கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்பதற்கு கீழடி ஒரு சாட்சி.