Tamilnadu

“எங்க தெருவுல கண்ணாடி போடக்கூடாது” - கடலூரில் பட்டியலின இளைஞரை தாக்கி தீண்டாமைக் கொடுமை!

கடலூர் மாவட்டம், எம்.படிக்குடிக்காட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன். இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த வாரம் சனிக் கிழமையன்று ஆதிக்க சாதியினர் இருக்கும் பகுதியில், கண்ணாடி அணிந்து வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் அழகேசனை வழி மறித்துள்ளனர்.

தங்கள் தெருவிற்குள் வரும் போது கண்ணாடி அணியக்கூடாது என்றும் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டுதான் செல்லவேண்டும் எனவும் சாதி பெயரை சொல்லி தீட்டியுள்ளனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகேசனை ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்கியுள்ளனர். அழகேசனின் தாயார், அன்னக்கிளி இதை தட்டிக்கேட்டுள்ளார்.

அதனைப் பெறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் அழகேசனின் தாயரையும் அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் அன்னக்கிளி காயம் அடைந்தார். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தன்னையும், தன் தாயாரையும் சத்யராஜ், பழனிச்சாமி, கோபி, வெங்கடேசன் ஆகிய 4 பேரும் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அழகேசன். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நடவடிக்கை எடுக்க பெரிய அளவில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அழகேசனின் ஊர் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

பின் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக உறுதி அளித்தார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சத்யராஜ், பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கோபியை போலீசார் தேடிவருகின்றனர்.

இப்பகுதி பட்டியலின மக்கள் இது மட்டுமல்ல, பல வகையிலும் சாதிய தீண்டாமையை சந்தித்து வருகின்றனர். ரேசன் கடை, போக்குவரத்து, அடிப்படை தேவை என அனைத்திற்கும் ஆதிக்க சாதி மக்கள் இருக்கும் பகுதிக்கு செல்லவேண்டியுள்ளது. அதனால் அடிக்கடி தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வருவதாக அம்மகள் கூறுகின்றனர். சாதி மோதல்கள் தொடர்கதையாகிப் போனதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சியர் தான் முன்வரவேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.