Tamilnadu
தற்கொலை என நினைத்து அடக்கம் செய்யப்பட்ட உடல் மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனை:மரணத்தில் திடீர் திருப்பம்!
கடலூர் முதுநகர் ஜி.என்.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் வெண்மதி +2 படித்து முடித்துள்ளார். வெண்மதி, கடந்த மாதம் 17ம் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
தூக்கில் தொங்கிய வெண்மதியின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த, அவரது பெற்றோருக்கு மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது. அங்கிருந்த சிலர், தூக்கில் தொங்கியபோது மரத்தில் உடல் உராய்ந்ததில் உடலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறியதையடுத்து தற்கொலை என முடிவு செய்து அவரது குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் குடிபோதையில், வெண்மதியின் தங்கை லட்சுமியிடம், “உன் அக்காவைக் கொன்றதுபோல் உன்னையும் கொன்றுவிடுவோம்” என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து லட்சுமி, தந்தை ஆறுமுகத்திடம் தெரிவித்ததையடுத்து, சந்தேகமடைந்த ஆறுமுகம் புகார் அளித்துள்ளார்.
தனது மகள் கொலை செய்யப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்டதாகவும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கடலூர் சப் கலெக்டர் சரயூவிடம் புகார் அளித்தார் ஆறுமுகம். சப் கலெக்டர் சரயூ உத்தரவின் பேரில் முதுநகர் போலீசார் வெண்மதியின் உடலைத் தோண்டி எடுத்து, மருத்துவர்களின் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மீண்டும் அடக்கம் செய்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த விவரம் தெரியவரும்.
இதற்கிடையே, வெண்மதியின் மரணத்தில் சந்தேகிக்கப்படும் பிரசாந்த், விஜயகாந்த், விவேகானந்தன், இளையராஜா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாந்த் என்பவர் வெண்மதியின் உறவினர்; அவர் வெண்மதியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
காதலுக்குச் சம்மதிக்காததால் வெண்மதி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்கிற கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்கொலை எனக் கருதி புதைத்த நிலையில், மரணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!