Tamilnadu

பாதி கூட நிரம்பாத பொறியியல் கல்லூரி இடங்கள்... சில கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை : என்ன காரணம்?

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதுமுள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் தோராயமாக 1 லட்சத்து 70 ஆயிரம் பி.இ., பி.டெக்., இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சிறப்புப் பிரிவினருக்கு கடந்த ஜூன் 28ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு ஜூலை 3ம் தேதியும் துவங்கி நடைபெற்றது.

நடைபெற்று முடிந்த பொறியியல் கலந்தாய்வில், இதுவரை 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 52% பொறியியல் இடங்கள் காலியாக உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது. மேலும், 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், மொத்தமுள்ள இடங்களில் 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் 76,364 இடங்களும், துணை கவுன்சிலிங் மூலம் 4,548 இடங்களும், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் மூலம் 1,683 இடங்களும் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை அதிகமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடப்பிரிவை அதிகமாகத் தேர்வு செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் முன்னணியில் இருந்த மெக்கானிக்கல் துறை மீதான ஆர்வம் இந்தாண்டு மாணவர்கள் மத்தியில் குறைந்துள்ளது.

பொறியியல் கல்லூரி இடங்கள் பெரும்பாலானவை நிரப்பப்படாமல் இருப்பதற்கு, பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டதே காரணம் எனவும், பொறியியல் துறையில் தகுந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.