Tamilnadu
ஆணவக் கொலைகளை தடுக்கத் தவறினால் போலீஸ் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
நாடு முழுவதும் ஆணவக் கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களில் வந்த செய்திகளை வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
இதனையடுத்து ஆணவக்கொலைகளை தடுப்பது, தீர்வு காண்பது குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் உத்தரவிட்டனர். இதன்பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை திருப்தி அளிக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், உதவி ஐ.ஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இன்று (ஜூலை 30) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநிலம் முழுவதும் ஆணவக் கொலைக்கென சிறப்பு பிரிவு காவலர்கள் தனியாக இல்லாததால் சட்டம் ஒழுங்கு வழக்கை விசாரிக்கும் போலீசாரே ஆணவக்கொலை வழக்குகளையும் விசாரிப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது.
அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் காவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பிரிவை எப்படி சிறப்புப் பிரிவாக கருத முடியும்? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆணவக்கொலை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறைக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இறுதியாக, ஆணவக்கொலைகளை தடுப்பது தொடர்பாக விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர்.
மேலும், ஆணவக் கொலை தொடர்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக அரசுத் தரப்பு தாக்கல் செய்த பதிலை விமர்சித்த நீதிபதிகள், ஆணவக் கொலை குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் என்ன பயன் ஏற்படும் என கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை நாளை (ஜூலை 31) வழங்குவதாகத் தெரிவித்தனர்.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!