Tamilnadu

தமிழகத்திலும் தொடங்கிய மாட்டிறைச்சி தாக்குதல் : ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது!

மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள், மாட்டிறைச்சி உண்போரை இந்துத்வா கும்பல் தாக்கும் போக்கு வட மாநிலங்களில் பெருகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் நிலைமை அந்தளவு மோசமாகாமல் இருந்துவந்தது. தற்போது, தமிழகத்திலும் மாட்டிறைச்சி தாக்குதல் நிகழத் தொடங்கியுள்ளது.

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில், மாட்டிறைச்சி வைத்திருப்போர் மீது பசுக் குண்டர்கள் தொடங்கிய கொலைவெறித் தாக்குதல்கள் இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் மூர்க்கமாகத் தொடர்கிறது.

மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்வா கும்பலின் தாக்குதல்கள் வட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்திலும் தொடங்கியுள்ளது சமீபத்திய நிகழ்வுகளின் மூலமாகத் தெரியவருகிறது.

சமீபத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகமது பைசான், மாட்டிறைச்சி சூப் சாப்பிடும் போட்டோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த சில இந்துத்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நிர்மல் குமார், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தைக் குறிப்பிட்டு, “எங்கெங்கோ இருப்பவர்களை மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்குகிறீர்கள். நாங்கள் அடிக்கடி மாட்டுக்கறி சாப்பிடுவதை பதிவிடுகிறோம். முடிந்தால் வாருங்கள்” என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, இன்னொரு பதிவில் “மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்துக் கொள்வீர்களா? How is it? இந்து மத வெறியர்களே!” எனக் கேட்டுள்ளார். இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கோவை போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாட்டுக்கறி தொடர்பான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் வடமாநிலங்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் நிலையில், தமிழகத்திலும் இந்தப் போக்கு துவங்கியுள்ளது பலரையும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.