Tamilnadu

வலதுபுறம் துடிக்கும் இதயம் - உயிரைக் கையில் பிடித்தப்படி போராடும் குழந்தை; கை விரித்த அரசு மருத்துவமனை!

மனித உடலில் உள்ள அதி முக்கிய உறுப்புகளில் முதன்மையானது இதயம். மனிதர்களுக்கு மார்பின் இடது பக்கத்தில் இதயம் இயற்கையாக அமைந்திருக்கும். ஆனால் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு வலப்புறத்தில் இதயமும், ரத்த சுத்திகரிப்பு அறைகள் இல்லாத குறைப்பாடும் உள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, பூமதி ஆகிய தம்பதியினருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதன் மூலம் பெற்றோருக்கும் மருத்துவர்களுக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில், இடப்புறம் இருக்க வேண்டிய இதயம், வலப்புறமும், மனித உடலில் உள்ள ரத்தத்தை சுழற்சி செய்ய அனுப்பவேண்டிய நான்கு வால்வுகள் உள்ள இடத்தில் பச்சிளம் குழந்தைக்கு 1 வால்வு மட்டுமே இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அப்போது, இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களை அணுகி குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளச் சொல்லி பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சென்னை, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தது குழந்தைக்கு இரண்டு முறை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த சிகிச்சைக்கு சுமார் 7 முதல் 9 லட்சம் வரையில் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். வெறும் கூலித்தொழிலாளியான பாலாஜியோ லட்சக்கணக்கான பணத்திற்கு எங்கு செல்வதென்று அறியாமல் மன வேதனையுடன் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார்.

பின்னர், கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி செய்யுமாறு பாலாஜி பூமதி தம்பதியினர் மன்றாடியுள்ளனர். இதனையடுத்து, குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பரிந்துரைத்துள்ளார்.

சென்னைக்கு சென்று அரசு மருத்துவமனையில் சோதித்து பார்த்தப்பிறகு, பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர். கஷ்டப்பட்டு ஈன்றெடுத்த குழந்தையை குணப்படுத்துவதற்காக கடலூர், புதுச்சேரி, சென்னை என அலைந்து திரிந்தும் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருவதாக சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் தமிழக அரசின் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையை கூட செய்யமுடியாது என அலைக்கழித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள அனைத்து ஏழை மக்களுக்குமான அரசு என ஒவ்வொரு முறையும் மார்த்தட்டிக் கொள்ளும் எடப்பாடி அரசால், அரசு மருத்துவமனையில் குறைப்பாட்டுடன் பிறந்த பச்சிளம் குழந்தையின் சிகிச்சைக்கு கொடுக்க முடியாதது அதிருப்தியும், வேதனையுமே அளிக்கிறது.

எங்களது சூழ்நிலையையும், குழந்தையின் உடல்நிலையையும் கருத்தில்கொண்டு அரசு உதவ வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.