Tamilnadu

பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக மீண்டும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவிப்பு!

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு செவ்வாயன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடாததை கண்டித்து ஞாயிறன்று (ஜூலை 7) அன்று தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் ஒருங் கிணைப்பாளர்கள் அன்பரசு, சென்னையில் செவ்வாயன்று (ஜூலை 2) செய்தியாளர்களிடம் கூறியதாவது,"சட்டமன்றத்தில் செவ்வாயன்று (ஜூலை2) நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை யில் ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகள் சார்ந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பாவது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம் அதிலும் எந்தவித அறிவிப்பும் இல்லை.

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட ஒன்பது அம்சக்கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவேண்டும், வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள், புனையப்பட்ட பொய் வழக்குகள் , பழிதீர்க்கும் பணியிட மாறுதல்களை ரத்து செய்து மறுக்கப்படும் பதவி உயர்வினை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்தப்போவதாகவும், மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்ட த்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) நடத்த திட்டமிட்டிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக தி.மு.க. உறுப்பினர் சுரேஷ் ராஜன், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.