Tamilnadu

மத்திய வங்கக்கடலில் புயல்காற்று வீசும்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் போன்ற வடதமிழக பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு திசை நோக்கி மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் மீன்பிடிக்க அடுத்த 24 மணிநேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலையைப் பொறுத்தவரை 30-38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.