Tamilnadu

பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு ம.பி. அரசு செக்: அப்பாவிகளை தாக்கினால் 5 ஆண்டு சிறை!

பிரதமர் மோடி 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிந்து இந்துத்துவா கும்பல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் கும்பல்களின் அராஜகம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் அக்லாக் என்னும் பகுதியில் முதியவர் ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பசு பாதுகாப்பு கும்பல் அவரை அடித்தே கொன்றது.

இந்த சம்பத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தனர். ஆனாலும், பசு பாதுகாவலர்கள் தனது போக்கினை மாற்றிக்கொள்ளாமல் உள்ளனர். இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும் மீண்டும் இந்துத்துவா கும்பலின் வன்முறை வெறியாட்டம் துவங்கியுள்ளது.

இதனிடையே இத்தகைய வன்முறை சம்பவங்களை தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதற்கிடையே, கடந்த மாதம் மத்தியப் பிரதேசம் சியோனி நகரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 2 பேர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பசு பாதுகாப்பு பெயரிலான குண்டர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, முதல்வர் கமல்நாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 2004ல் இயற்றப்பட்ட பசுவதை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடத்தினால் 6 மாதம் முதல் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 முதல் ரூ.50,000 வரைஅபராதமும் விதிக்கப்படும். கும்பலாக சென்று தாக்கினால் ஓராண்டு முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், தண்டனை பெற்றவர்கள் 2வது முறையாக வன்முறையில் ஈடுபட்டால் அவர்களுக்கான தண்டனை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டதிருத்த மசோதா அடுத்த மாதம் 8ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது சட்டம் கொண்டுவரப்பட்டால், பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெருமையை மத்தியப் பிரதேசம் பெறும்.