Tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் வாழ்வாதாரமே அழிந்துவிட்டது: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்!

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன.

மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர்மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கு முன்னதாக ஜூன் 1 தேதி போராடிய 13 இடங்களில் போராட்டம் நடத்திய 450 விவசாயிகள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் வயலில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ஆடு, மாடுகளையும் அழைத்து வந்து அவற்றின் கழுத்தில் திட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி தொங்க விட்டிருந்தனர்.

மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி கூறுகையில்," ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விட்டது. எங்கள் கால்நடைகளை பராமரிக்க முடியாதா சூழலில் எங்களை ஆளும் அரசுகள் தள்ளியுள்ளது. மேலும் கடுமையான வறட்சியினால் விவசாயம் பொய்த்துப் போய் உள்ளது.

அதனால் வாங்கிய கடனை கட்டுவதற்கு வழிதெரியாமல் உள்ள விவசாயிகளுக்கு மேலும் மேலும் அடி கொடுக்கும் வையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டுகிறது". என கண்ணர் மல்க அவர் தெரிவித்துள்ளார்.