Tamilnadu

இந்த பொறியியல் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டாம் - தரமற்ற கல்லூரிகளின் பட்டியல்!

தமிழகத்தில் அரசு கல்வி நிலையங்களை விட தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பல பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்தாலும் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடத்துவது வாடிக்கையாக மாறிவிட்டது. மாணவர் அமைப்புகளும் கல்வி நிலையங்கள் கட்டமைப்பு வசதியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்தது. அதில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 92 கல்லூரிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, போதிய பேராசிரியர் இல்லாததால் 300 பாடப் பிரிவுகளை எடுத்து நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 250 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியதோடு, நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதில் 92 பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகம் வழங்கிய கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததுடன், உரிய விளக்கமும் அளிக்கவில்லை.

இதையடுத்து அந்த 92 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா வெளியிடாமல் நிலுவையில் வைத்துள்ளார்.

அந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால் தான் அதில் மாணவர்கள் சேராமல் தடுத்து நிறுத்தமுடியும். எனவே பட்டியலை வெளியிட வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மேலும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, லஞ்சம் வாங்கிக்கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பெயர் பட்டியலை வெளியிட மறுத்து வருகிறார் என லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதனையடுத்து தரமற்றவை என்று கூறப்பட்ட 92 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அந்த பட்டியலை www.annauniv.edu என்ற இணையதளத்தில் கல்லூரிகளின் முழு விவரம் மற்றும் அதன் மீதான பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையையும் வெளியிட்டுள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்யும் முன் சரிபார்த்துக்கொள்ள அண்ணா பல்கலை. அறிவுறுத்தியுள்ளது.