Tamilnadu

சென்னை ஏரிகள் நீர் இல்லாமல் பாலைவனமாக இருக்கிறது : செயற்கைக்கோள் புகைப்படங்களே சாட்சி 

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சென்னை பெருநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.

தற்போதைய நிலவரப்படி நான்கு ஏரிகளையும் சேர்த்து வெறும் 23 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (இவற்றில் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கன அடி சேமித்து வைக்கலாம்). ஏற்கனவே சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் ஏரி முழுவதும் தரிசு நிலமாகக் காட்சி அளிக்கிறது.

பூண்டி ஏரியில் மட்டும் 22 மி.கன அடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி) அந்த தண்ணீர் ஏரியின் ஒரு பகுதியில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. அந்த நீர் சென்னை குடிநீர் தேவைக்காக 12 கன அடி வீதம் பேபி கால்வாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனை இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். இதைத் தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்தும் தண்ணீர் பெற முடியாது. இதையடுத்து சென்னையின் குடிநீர் ஆதாரமான 4 ஏரிகளும் பூஜ்ஜியமாகும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளின் செயற்கைகோள் படம் வெளியாகியுள்ளது.

புழல் ஏரி

மேலே இருக்கும் புகைப்படத்தில், இடதுபக்கம் இருப்பது புழல் ஏரி வறண்டு போவதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி எடுக்கப்பட்டது. அதே போல் வலதுபுறத்தில் உள்ள படம் சென்னையில் வறட்சி நிலவிய பிறகு இந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு புழல் ஏரியில் 1393 மில்லியன் கன அடி இருந்தது. அனால், தற்போது புழல் ஏரியில் 2 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

அதேபோன்று செம்பரம்பாக்கம் ஏரியின் செயற்கைகோள் படம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செம்பரம்பாக்கத்தில் மொத்தம் 1181 மில்லியன் கன அடி இருந்தது அனால், தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது.

தற்போது சென்னையில் உள்ள நீர்நிலைகளில் 1% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதுவும் இன்னும் சில தினங்களில் குறைந்துவிடும். அதற்குப் பிறகு, சென்னை முழுமையான தண்ணீர் பஞ்சத்தில் சிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.