Tamilnadu

விமானப்படை வீரர் அபிநந்தனை கேலி செய்யும் பாகிஸ்தான் ஊடக விளம்பரம் - கொந்தளிக்கும் இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஜூன் 16-ம் தேதி உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல் முறுக்கு மீசை உடைய ஒருவரை நடிக்க வைத்து கேலி செய்வது போல் விளம்பரப்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் விமானம், இந்திய எல்லைக்குள் நுழைந்தது. அதனை விரட்டியடித்த 21 ரக விமானத்தை இந்தியா பயன்படுத்தியது. அப்போது எதிர்பாராத விதமாக இந்திய விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தை இயக்கிய இந்திய பைலட் அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பித்து பாகிஸ்தான் பக்கம் தரையிறங்கினார். பின்னர் பாகிஸ்தான் ராணுவம் அவரை சிறைபிடித்தது.

அதனைத் தொடர்ந்து அபிநந்தன் தங்கள் வசம் பத்திரமாக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ மூலம் உறுதிப்படுத்தியது. அந்த வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டு பாகிஸ்தான் ராணுத்தினரிடையே சகஜமாய் பேசுவார். அப்போது இந்திய விமானப்படை குறித்து கேட்கும் கேள்விகளுக்கு ”Iam sorry. Iam not supposed to answer" என பதிலளிப்பார். பின்னர் டீ நன்றாக இருக்கிறது என்று நன்றி சொல்வார்.

இந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் பாகிஸ்தான் ஊடகம் அந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில், இந்திய கிரிக்கெட் அணி உடை போன்ற ஒன்றை ஒருவர் அணிந்திருப்பார். அந்த நபர் அபிநந்தன் போல முறுக்கு மீசை வைத்துக் கொண்டு டீ குடித்துக் கொண்டே 'Am sorry. Iam not supposed to tell this' என்று கிரிக்கெட் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு திரும்ப திரும்ப கூறுகிறார்.

பின்னர், டீ நன்றாக இருக்கிறது என்று கூறுவார். கூறிக்கொண்டே அவர் குடித்த டீ கப்புடன் புறப்படுவார். அப்போது, ஒருவர் அவரின் மீது கைவைத்துவிட்டு கப்பை (உலகக் கோப்பை) வைத்துவிட்டு செல்லுமாறு கூறுவதாக அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்திய மக்கள் ஹீரோவாக பார்க்கும் அபிநந்தனை பாகிஸ்தான் ஊடகம் கேலி செய்யும் விதமாக வெளியிட்ட விளம்பரம், இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.