Tamilnadu
எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு டாக்டர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். இதுபோன்ற படிப்புகளை வழங்குவது சட்டவிரோதமல்ல எனவும், டாக்டர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண பல்கலைக்கழக நிர்வாக குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், மத்திய அரசு அல்லது மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் எந்த படிப்பையும் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுபோன்ற படிப்புகளை நடத்த அனுமதித்தால், அதில் படித்து முடித்தவர் அந்த பிரிவில் நிபுணர் என மக்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறி, மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் டிப்ளமோ படிப்புகளை வழங்க பல்கலைக்கழகத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை மதிக்காமல் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, பல்கலைக்கழகத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். நான்கு வாரங்களில் இத்தொகையை கல்வித்துறைக்கு செலுத்த வேண்டும் எனவும், அத்தொகையை அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!