Tamilnadu

"நீட் தேர்வால் ஏற்பட்ட உயிரிழப்பு தற்கொலையல்ல அரசு செய்த படுகொலை" - கே.பாலகிருஷ்ணன்

நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் இரண்டு தமிழக மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது தற்கொலை அல்ல, மத்திய மாநில அரசுகள் செய்த கொலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மத்திய அரசின் தவறான மருத்துவக் கொள்கைகளால் தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகள் மீதான படுகொலை நடந்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என தொடர்ந்து தமிழகத்தில் வலியுறுத்தப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டும், மாநில , மத்திய அரசுகள் கண்டு கொள்ளாமல் செயல்பட்டதன் விளைவு, மருத்துவ கனவில் இருந்த இரண்டு மாணவிகள் உயிர் பலி போயிருக்குறது. நீட் தேர்வால் மாணவர்கள் செய்த தற்கொலையை நாங்கள் படுகொலை என்றே கூறுகிறோம்.

எடப்பாடி அரசு நீட் தேர்வுக்கு எதிராக நிற்காமல் அவர்களுக்கு பயந்து நடப்பதால் தான் மோடி அரசு நீட் தேர்வு குறித்த முடிவில் மாறாமல் இருக்கிறது. நீட் தேர்வு முறையில் , இட ஒதுக்கீடு இல்லை என்பதால் பிற்படுத்தபட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்நிலையில் பள்ளிகளை திறந்து மாணவர்களை சிரம்ப்படுத்துகிறது எடப்பாடி அரசு. இந்நிலையில் பள்ளிகளுக்கு புத்தகங்களும் வழங்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மும்மொழி திட்டம் என்பது பின்வாசல் வழியாக இந்தி திணிப்பு என்பதாகவே பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்..

எட்டுவழிச் சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தில் வலுகட்டயாமாக கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் அரசு தீர்க்க வேண்டும்.காவேரியில் இருந்து நமக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் 400டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. ஏரிகள், ஆறுகள் தூர்வாரப்படாமல் பாழாகி வருகிறது. இதனால் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

மின்வாரியம், என்எல்சி, ரயில்வே போன்ற துறைகளில் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழக அரசு துறையில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை ,சட்டதிருத்தத்தை உடனடியாக தமிழக அரசு கொண்டு வர வேண்டும். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீட் தேர்விற்கு எதிராக வலுவாக குரல் கொடுப்போம். நீட் தேர்விற்கு எதிராக எடப்பாடி அரசு எதுவும் செய்யாது என நன்கு தெரிந்து விட்டது. எனவே திமுக தலைவர் ஸ்டாலினிடம் விவாதித்து மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்" இவ்வாறுக் கூறினார்.