Tamilnadu

மின்துறை அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தோர்; தமிழர்களை வஞ்சிக்கும் அரசு : வேல்முருகன் கண்டனம்

தமிழ்நாடு மின் வாரிய துணை மின் பொறியாளர் பதவிகளில் வெளிமாநிலத்தவர் திணிக்கப்பட்டு தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதற்கு கண்டனக் குரல் எழுப்பியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தமிழ்நாடு மின் வாரியத்தில் ஆயிரக்கணக்கில் துணை மின் பொறியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை பல ஆண்டுகளாகவே நிரப்பப்படாமல் தொடர்கின்றன. தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்து இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப முடியும். ஆனால் அதிமுக அரசு அப்படிச் செய்வதில்லை. தேர்வு நடத்தி துணை மின் பொறியாளர்களைத் தேர்வு செய்கிறது. ஆனால் இந்தத் தேர்வு எப்பொழுதாவதுதான் நடக்கும். எல்லாப் பணியிடங்களுக்குமாக நடக்காது. ஒரு குறிப்பிட்ட அளவு நியமனத்துக்கே தேர்வு. அந்தத் தேர்வும் பெயரளவுக்கே. ஆனால் பணி நியமனம் கையூட்டு அடிப்படையில்தான். அதனால் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களே தேர்வாவர்.

இப்போது அதையும் தாண்டி வெளிமாநிலத்தவரும் தேர்வாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காரணம், அதிமுக பெயரில் தமிழகத்தில் பாஜக ஆட்சி, அதாவது டெல்லியின் நேரடி ஆட்சி நடப்பதுதான். அண்மையில் தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 துணை மின் பொறியாளர் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. அதில் ஆந்திரா, கேரளா, மகாராட்டிரா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் 38 பேர் தேர்வானார்கள். தேர்வானவர்களில் 5 பேருக்கு முதல் கட்டமாக மே 29-ம் தேதியன்று பணியாணை வழங்கப்பட்டது. 5 பேருக்கும் தமிழக முதல்வர் தனது கையால் பணியாணை வழங்கி தலைமைச் செயலகத்தில் அதை ஒரு விழா போலவே நடத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டில், பொறியியல் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ள நிலையில் வெளிமாநிலத்தோர் 38 பேருக்கு துணை மின் பொறியாளர் பணியைத் தந்துள்ளது எடப்பாடி அரசு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு நடத்தும் தேர்வுகளை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் மற்றும் நேபாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் எழுத விண்ணப்பிக்கலாம் என்று 2016இல் தமிழ்நாடு அரசு சட்டதிருத்தம் செய்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இப்படி வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரும் தமிழக அரசுப் பணிகளில் புகுத்தப்படுகின்றனர். திட்டமிட்டு இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டதென்றால் அது பாஜக-மோடி கட்டளைப்படிதான்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டிரா போன்ற பல மாநிலங்களில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் அரசுப் பணிகளில் சேர முடியாதபடி தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் திறந்த வீட்டில் நாய் நுழைய அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்.

ஏற்கனவே தமிழகத்தின் மத்திய அரசுப் பணிகள், தகவல் தொழில்நுட்பத்துறைப் பணிகள் மற்றும் முறைசாராத்துறைப் பணிகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்-இந்திக்காரர்கள் குவிக்கப்படுகிறார்கள். ரயில்வே, விமானத்துறை, கப்பல்துறை, வங்கித்துறை, அஞ்சல்துறை, வருவாய் வரித்துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனம், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, சேலம் உருக்காலை, ஆவடி படைக்கலன் தொழிற்சாலை என தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலுமே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்; இந்திக்காரர்கள் புகுத்தப்படுகிறார்கள். இப்போது தமிழக அரசு சார்ந்த பணிகளிலும் வெளியாட்கள் வலிந்து புகுத்தப்படுகிறார்கள்.

இதனால் சொந்த மண்ணிலேயே தமிழர் அகதிகள் மற்றும் அடிமைகள் ஆகிவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது! குறிப்பாக, தமிழக இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் இருண்டுவிடும் பேராபத்தே ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முடிவுகட்ட, “தமிழக அரசுப் பணிகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே”, “தமிழகத்திலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய அரசு நிறுவனப் பணிகள் மற்றும் தனியார்துறைப் பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே” எனச் சட்டம் இயற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்திப் போராடிவருகிறோம். இந்தப் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள், மாணவர்களும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் தி.வேல்முருகன்.