Tamilnadu

கிரண்பேடிக்கு செக்: புதுச்சேரி ஆளுநர் மீது மாணவர் கூட்டமைப்பினர் புகார்

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநர் வசம் கொடுத்ததால் கடந்த 3 ஆண்டுகளாக கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் மோதல் போக்கு இருந்தது. சமீபத்தில் கிரண்பேடியின் அதிகார மீறலைக் கண்டித்தும், புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதலமைச்சர் நாராயணசாமி தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை, ரத்து செய்யக்கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்தது.

இதனிடையே தற்போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மீது மாணவர் கூட்டமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகார் மனுவில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு சார்ந்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளனர். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் யூனியன் பிரதேசத்தில் மாநில அரசுக்கு தொல்லை கொடுக்கும் பா.ஜ.க.,வின் போக்குக்கும் செக் வைக்கப்பட்டுள்ளாதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.