Tamilnadu
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சி பலிக்காது: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!
தூத்துக்குடி மக்களுடைய வாழ்வாதார பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆண்டு மே 22-ம் தேதியன்று அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அமைதியான முறையில் ஊர்வலமாக சென்றனர். அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர். குறி வைத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மொத்தம் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”தமிழக காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலால் மரணமடைந்த 15 பேரின் குடும்பத்தாருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மீண்டும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூரச்சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த போதிலும், மக்கள் மனதிலிருந்தும், உயிரிழந்த, ஊனமடைந்த குடும்பங்களின் மனதிலும் இச்சம்பவம் ஆறாத ரணமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓராண்டு முடிவடைந்தும் இதுவரை நீதி கிடைக்காததும் மிகுந்த வேதனையாக உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது எந்தவித விசாரணையோ, நடவடிக்கையையோ இதுவரை எடுக்காமல் மக்கள் விரோத அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு முனைந்து வருகிறது. இந்த முயற்சி பலிக்காது. வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகவும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்றும் வலியுறுத்தி சிபிஐ(எம்) சார்பில் தூத்துக்குடி மாவட்டக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடி வருகிறது.
சுற்றுச் சூழலையும், மக்களின் உயிர் - வாழ்வதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கிட வேண்டுமென்றும், உயிரிழந்த 15 பேருக்கும் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமெனவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இக்கோரிக்கைகளுக்காக போராடும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்போம் என அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசை கண்டித்தும் கண்டன குரல் எழுப்பிட வேண்டுகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்
Also Read
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!