Tamilnadu

கெயில் நிறுவன பணியை தடுத்ததாக விவசாயிகள் 8 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 55 புதிய இடங்களுக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது. அதில் தமிழகத்தில் உள்ள 3 இடங்களும் அடங்கும். இந்த மூன்று இடங்களில் நிலப்பரப்பு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும், கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் நாகை மாவட்டம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சி நடைபெற்றுவருகிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன.

இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மயிலாடுதுறை அருகே காளகஸ்திபுரம், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதித்து வருகிறது. இந்நிலையில் கெயில் நிறுவன பணியை தடுத்ததாக கெயில் நிறுவனத்துக்கு எதிராக போராடிய நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைது செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் 8 பேர் மீதும் செம்பனார் கோவில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது; “போலீசார் போராடுபவர்களை அச்சமூட்டுவதற்காக இந்த நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. சொந்த நாட்டு மக்களின் மீது துளி கூட அக்கறையில்லாத அரசாங்கம் பன்னாட்டு நிறுவங்களுக்கு சேவை செய்து வருகிறது. கெயில் நிறுவன பணியை துரிதப்படுத்த விவசாயிகளை கைது செய்வது, வழக்குப்பதிவு செய்வது போன்ற வேலைகளை போலீசார் செய்து வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.