Tamilnadu

தூத்துக்குடி நினைவேந்தல் கூட்டம் : 500 பேர் கலந்து கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ல் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கல்லூரி மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு கண்டனங்கள் குவிந்தது. துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அந்த நினைவு தினத்தை ஒட்டி, வரும் 22-ம்தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மே 9ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தூத்துக்குடி பெல் ஓட்டலில் காலை 9 மணி முதல் 11 ஆம் தேதி வரை கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர். 250 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான கூட்டத்தில் ஏற்கனவே 250 பேர் கலந்து கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 500 பேர் கலந்து கொள்ளலாம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.